புதுடெல்லி: பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளை அடிப்படை யாகக் கொண்டு அகவிலைப்படி உயர்த்தப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதத் தில்மத்திய அரசு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய 60 சதவீதத்தில் இருந்து அகவிலைப்படி 63 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
இந்த உயர்வின் மூலம் சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,016 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.