இந்தியா

ஏடிஎம்மில் சிக்கிய ரூ.10,000-க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஜிதேஷ் குமார். பரோடா வங்கி வாடிக்கையாளர். இவர் கடந்த 2017, பிப்ரவரி 18-ம் தேதி நகரின் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.10,000 எடுக்க முயன்றார். ஆனால் பணமோ, ரசீதோ வரவில்லை. என்றாலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 கழிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் பரோடா வங்கி, எஸ்பிஐ வங்கி கிளையில் புகார் அளித்தார். ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடமும் புகார் அளித்தார். அவருக்கு திருப்தியான பதில் கிடைக்காததால் கடந்த 2017 டிசம்பரில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

          

இந்த வழக்கில், “அந்த ஏடிஎம் எஸ்பிஐ-க்கு சொந்தமானது. பணம் வழங்கப்பட்டதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளது. இதற்கு வங்கி பொறுப்பல்ல’’ என பரோடா வங்கி வாதிட்டது. என்றாலும் நுகர்வோர் ஆணையம் இந்த வாதத்தை நிராகரித்தது. பணம் வழங்கப்பட்டதற்கு திடமான ஆதாரங்களை கேட்டது. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, அப்பணம் 5 நாட்களுக்குள் திரும்ப அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய வங்கி தவறிவிட்டது என ஆணையம் குறிப்பிட்டது.

இறுதியாக, ‘‘ரூ.10 ஆயிரத்தை 9% வட்டியுடன் வழங்க வேண்டும். தாமதத்திற்காக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டது. இது இழப்பீட்டு தொகையை ரூ.3,28,800 ஆக உயர்த்தியது. மேலும் மன உளைச்சலுக்காக ரூ.3,000, சட்டச் செலவுகளுக்காக ரூ.2,000 வழங்கவும் வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.

SCROLL FOR NEXT