இந்தியா

கருப்புப் பணம் மீட்கப்பட்டு நாட்டுக்குக் கொண்டு வரப்படுவதையே விரும்புகிறோம்: உச்ச நீதிமன்றம்

பிடிஐ

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணம் மீண்டும் நம் நாட்டுக்கு கொண்டு வரப்படுவதைக் காண விரும்புகிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி செய்திருந்த மனுவில், “கடந்த 6 மாதங்களில் ஒரு ரூபாய் கூட வெளியே வரவில்லை. கருப்புப் பண பதுக்கல் மீதான விசாரணை ஆங்காங்கே சில சோதனைகள் மற்றும் சில சொத்துக்கள் முடக்கம் என்ற அளவில்தான் நடைபெற்றுள்ளது.” என்றார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தத்து, மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் ஒரு சாமானிய மனிதனின் குரல் வெளிப்பாடாக, “வெறும் பெயர்கள், விவரங்கள் அல்ல, கருப்புப் பணம் மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவரப்படுவதை காண விழைகிறோம்” என்றனர்.

2009ஆம் ஆண்டு ஜேத்மலானி மனுவிற்குப் பிறகே உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.

ஒரு ரூபாய் கூட வந்து சேரவில்லை என்ற வாதத்தை, அட்டார்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி வன்மையாக மறுத்துக் கூறும்போது, “ஒரு ரூபாய் கூட மீட்கப்படவில்லை என்பது தவறு. அவர்களில் சிலர் (கணக்கு வைத்திருக்கும் 627 பேர்) அபராதம் செலுத்தியுள்ளனர். இது தவிர, வருமான வரிச் சட்டத்தின் கீழ் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீதான முழு விசாரணையை முடிக்க மார்ச் 31, 2015 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசிடம் இது குறித்து என்னவெல்லாம் உள்ளதோ அதன் விவரங்கள் சிறப்பு விசாரணைக் குழுவிடத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆவணம், பெயர், மற்றும் விவரங்களை நாங்கள் சிறப்பு விசாரணைக்குழுவிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். எதுவும் அவர்களிடமிருந்து மறைக்கப்படவில்லை.” என்றார்.

அப்போதுதான் தலைமை நீதிபதி தத்து குறுக்கிட்டு, “பணம் நாட்டுக்கு திரும்பக் கொண்டு வரப்படுவதில்தான் எங்களுக்கு ஆர்வம் உள்ளது, பெயர்களையோ, விவரங்களையோ அல்ல.” என்றார்.

அப்போது அட்டார்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, சிறப்பு விசாரணைக் குழுவில் அனுபவமிக்க நீதிபதிகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்றும் கூறினார்.

சிறப்பு விசாணைக்குழுவின் மீதான நம்பிக்கையை நீதிபதி தத்து தெரிவிக்கும் போது, “சிறப்பு விசாரணைக் குழு இந்த விவகாரத்தை நிச்சயம் சிறப்பாகக் கையாளும் என்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.” என்றார்.

SCROLL FOR NEXT