இந்தியா

ஒபாமா வருகையால் தாஜ்மகாலில் கட்டுப்பாடு

ஆர்.ஷபிமுன்னா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 27-ம் தேதி ஆக்ராவுக்கு வருகை புரிய இருப்பதால் தாஜ்மகால் உட்பட வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட காலை 9.00 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உ.பி மாநில அரசு சார்பில் முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் ஒபாமா தம்பதியை வரவேற்கவுள்ளனர்.

இந்திய பயணத்தின்போது, தாஜ்மகாலை குடும்பத்துடன் பார்வையிடவுள்ளார் ஒபாமா. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக தாஜ்மகால், செங்கோட்டை உட்பட வரலாற்று சின்னங்களை பொதுமக்கள் பார்வையிட இரு நாட்களுக்கு தடை விதிக்க தொல்பொருள் துறை முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தாஜ்மகால் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட பொதுமக்களுக்கு காலை 9.00 மணி வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை செய்தியாளர்களிடம் உறுதி செய்த ஆக்ரா மண்டல ஆணையர் பிரதீப் பட்நாகர் கூறும்போது, “அந்த குறிப்பிட்ட நாளில் பொதுமக்களுக்காகவும் தாஜ்மகாலை திறந்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தினோம். அதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

விமானம் பறக்கத் தடை

டெல்லியில் இருந்து மதியம் 2.00 மணிக்கு ஆக்ரா வருகை தர இருக்கும் ஒபாமா, தனி விமானத்தில் ஆக்ரா ராணுவ விமானத்தளத்துக்கு வருகிறார். அங்கு, உபியின் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன் மனைவி டிம்பிள் யாதவுடன் வரவேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா வருகை ஒட்டி அன்றைய தினம், ஆக்ராவின் வான்வெளி ‘விமானங்கள் பறக்காத பகுதி’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT