ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்ததை அடுத்து, அம்மாநிலத்தில் 12வது சட்டமன்றத்தை அமைக்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அம்மாநில சட்டத் துறைதான் சட்டமன்றத்தை அமைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் ஆட்சி அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிடும்.
தற்சமயம், தன்னுடைய தந்தையாரின் உடல்நிலை காரணமாக லண்டனில் இருக்கும் முதல்வர் ஒமர் அப்துல்லா தன்னுடைய அனுமதியை அளித்துள் ளார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை ஆட்சி அமைக்க உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து அம்மாநில சட்டத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "முதல்வர் ஒமர் அப்துல்லாவிடமிருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து 2015, ஜனவரி 20ம் தேதி தன்னுடைய கெடுவை முடிக்க இருக்கும் 11வது சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு 12வது சட்டமன்றம் அமைக்கப்படும்" என்றார்.
மேலும் அவர், "புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகு அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொள்வார்கள். குறிப்பிட்ட காலவேளைக்கு சபாநாயகரை ஆளுநர் நியமிப்பார். அவர் மூலம் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொள்வார்கள்" என்றார்.
முன்னதாக ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி மாநில ஆளுநர் என்.என்.வோராவை நேற்று சந்தித்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கும் விஷயத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது.