இந்தியா

பாஜகவில் இணைகிறார் தினேஷ் திரிவேதி?

செய்திப்பிரிவு

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான தினேஷ் திரிவேதி பாஜகவில் இணையவிருப்பதாக கூறப் படுகிறது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அக்கட்சியின் மூத்த தலைவர் சித்தார்த் நாத் சிங் ஆகியோருடன் திரிவேதி கடந்த சில வாரங்களாக தொடர்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து திரிவேதியிடம் கேட்டபோது அவர் நேரடியாக பதில் அளிக்க மறுத்தார். “அரசியலில் நாட்டுக்கு எது நல்லதோ அதையே நாம் செய்யவேண்டும்” என்றார் அவர்.

மேலும் “பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய தலைவர். அவரிடம் உலகம் நிறைய எதிர்பார்க்கிறது” என்றார்.

மேற்கு வங்க முதல்வரும் தனது கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை தினேஷ் திரிவேதி விமர்சித்தார்.

“மக்களின் எதிர்பார்ப் புகளை மம்தா நிறைவேற்றத் தவறி விட்டார். முந்தைய இடதுசாரி அரசுடன் ஒப்பிடும் போது திரிணமூல் காங்கிரஸ் அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆனால் இதைவிட சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். மேற்கு வங்க அரசியலில் வன்முறை தலைதூக்கியிருப்பது என்னை கவலையடையச் செய் துள்ளது” என்றார் அவர்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, ஆத் ஆத்மி கட்சியை விட்டு விலகிய மூத்த தலைவர் ஷாஜியா இல்மி, ஆம் ஆத்மி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி, முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கிருஷ்ண தீரத் ஆகியோர் பாஜகவில் கடந்த வாரம் இணைந்தனர்.

இந்நிலையில் தினேஷ் திரிவேதி அக்கட்சியில் இணையவிருப்பதாக கூறப் படுகிறது.

SCROLL FOR NEXT