திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
என்ஐடிஐ (நேஷனல் இன்ஸ்டிடியூஷன் ஃபார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பில் பொருளாதார அறிஞர் பிபெக் தீப்ராய், டிஆர்டிஓ முன்னாள் தலைவர் வி.கே.சரஸ்வத் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார்.
65 ஆண்டுகளாக இருந்து வந்த திட்டக் குழுவுக்கு மாற்றாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, ராதா மோகன் சிங் ஆகியோர் சிறப்பு பொறுப்புகள் இல்லாத உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, தன்வார் சந்த் கேலாட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.
62 வயதாகும் அரவிந்த் பனகாரியா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார நிபுணர். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றுபவர். முன்பு ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்துள்ளார். உலக வங்கி, ஐஎம்எப், டபிள்யூடிஓ, ஐ.நா.வின் வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு, மாறி வரும் சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்றபடி புதிய அமைப்பு உருவாக்கப்படும் என கூறியிருந்தார். இதன்படி நிதி ஆயோக் அமைக்கப்பட்டுள்ளது.