இந்தியா

சார்லி ஹெப்டோ கார்ட்டூன் மறு பிரசுரம்: உருது நாளிதழ் ஆசிரியர் கைதாகி விடுதலை - மும்பை போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

பிரான்ஸ் நாட்டின் சார்லி ஹெப்டோ இதழில் வெளியான கார்ட்டுனை மறு பிரசுரம் செய்ததற்காக உருது நாளிதழ் ஆசிரிரை கைது செய்ததாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்றும் மும்பை போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

நாட்டின் முக்கிய நகரங்களில் வெளியாகும் உருது நாளிதழ் ‘அவத்நாமா’. இந்த இதழின் மும்பை பதிப்பின் ஆசிரியர் ஷிரின் தல்வி மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா நகரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்திய தண்டனைச் சட்டத் தின் 295ஏ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அதாவது மத உணர் வுகளைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிடுவதை இந்தப் பிரிவு தடை செய்கிறது.

இதுகுறித்து, மும்ப்ரா நகர காவல் துறை மூத்த ஆய் வாளர் எஸ்.எம்.முண்டே கூறும் போது, “மத உணர்வுகளை புண் படுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதாக புகார் வந்ததால் தல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னோம். நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள சார்லி ஹெப்டோ இதழ் அலுவலகத்தின் மீது கடந்த 7-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் உட்பட 12 பேர் பலியாயினர். நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன் வெளி யிட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.எனினும் அடுத்த வாரமே சிறப்புப்பதிப்பாக பல்வேறு கார்ட்டூன்களுடன் சார்லி ஹெப்டோ இதழ் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த கார்ட்டூன் அவத்நாமா நாளிதழின் மும்பை பதிப்பில் மறு பிரசுரம் ஆனது. இதையடுத்து மும்பை மற்றும் தானே காவல் நிலையங்களில் வாசகர்கள் புகார் செய்தனர். இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT