அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின்போது கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த இருப்பதாக ட்விட்டரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மிரட்டல் எங்கேயிருந்து ட்வீட் செய்யப்பட்டது என்ற தகவலைக் கேட்டு ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை வெளியான ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், "அல்லாவின் எதிரி ஒபாமா இந்தியாவுக்குச் செல்வதாகக் கேள்விப்பட்டேன். இந்திய இஸ்லாமியர்கள் வேதியியல் துறையில் வல்லவர்கள். எனவே, வேதிப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு கார் வெடிகுண்டு சிறப்பாக இருக்கும்" என்று பதிவிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை செய்து வரும் பாதுகாப்புப் படையினர் ட்வீட் செய்யப்பட்ட கணிப்பொறியின் ஐ.பி. முகவரியைத் தேடினர். ஆனால் அந்த முகவரி தீவிரவாதிகளின் கைவரிசையால் மறைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ட்வீட் எங்கேயிருந்து பதிவிடப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை.இந்த மிரட்டல் அனேகமாக ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்காக, இந்தியாவில் இருந்து இராக் சென்ற இளைஞர்களின் வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மும்பையில் இருந்து அரீப் மஜீத், சஹீம் தன்கி, அமான் டேண்டல் மற்றும் ஃபஹத் ஷேக் ஆகிய நான்கு இளைஞர்கள் இராக் சென்றனர். இவர்களில் அரீப் மஜீத் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஒபாமாவுக்கு அனைத்து விதங்களிலும் பாதுகாப்பை அளிக்க பாதுகாப்பு படையினர் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.