இந்தியா

புத்தாண்டை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு: ஆளில்லா விமானம், கேமராக்கள் மூலம் பெங்களூரூ நகரம் கண்காணிப்பு

இரா.வினோத்

குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக, பெங்களூருவில் வரலாறு காணாத‌ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 28-ம் தேதி பெங்களூரு சர்ச் தெருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் பலியானார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க யாரேனும் சதித் தீட்டி இருக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே காணப்படுகிறது.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, `தி இந்து’விடம் கூறியதாவது:

புத்தாண்டையொட்டி பெங்களூரு மாநகரம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து 125 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள‌ன. அதே போல பெங்களூருவின் முக்கிய இடங்களில் 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட் டுள்ளன. சட்டப்பேரவையைச் சுற்றி 6 கி.மீ. பரப்பளவில் முக்கிய‌ இடங்களில் மெட்டல் டிடக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல முக்கிய இடங் களில் புத்தாண்டு கொண்டாட் டங்களை கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட 5 ஆளில்லா விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானங்கள் 50 மீட்டர் உயரத்தில் பறந்து காட்சிகளை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அனுப்பும்.

இதேபோல பெங்களூரு மாநகரம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று மட்டும் 25 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 300 ஆம்புலன்ஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தைரியமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடலாம். இவ்வாறு ரெட்டி தெரிவித்தார்.

என்ஐஏ தீவிர விசாரணை

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பெங்களூரு தனிப்படை போலீஸார், மத்திய குற்றப்பிரிவு, தமிழக சிபிசிஐடி போலீஸார் உள்ளிட்டோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுடெல்லியிலிருந்து தேசிய புலனாய்வு பிரிவின் (என்ஐஏ) சிறப்பு இயக்குநர் நவனீத் ஆர்.வாசன் நேற்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

சிமி, அல் உம்மா, இந்தியன் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத அமைப்பினருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் என்ஐஏ தீவிர‌ விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை குற்றவாளிகள் குறித்து எவ்வித துப்பும் துலங்கவில்லை என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT