சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் ஆஷிஸ் சவுத் இறுதிச் சடங்கில் பங்கேற்க, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் இந்திய பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது.
மன்னர் மரணத்தையடுத்து, சனிக்கிழமையை துக்கநாளாக அரசு அறிவித்தது. இதையொட்டி தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. “சவுதி மன்னர் இறந்த செய்தி இந்திய அரசு மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி மற்றும் வருத்தத்தை அளிப்பதாக உள்ளது” என அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமீது அன்சாரி தலைமையில் இந்திய பிரதிநிதிகள் குழு, மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நேற்று புறப்பட்டது. அன்சாரி, சவுதிக்கான இந்தியத் தூதராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் சவுதி மன்னரின் இறப்புக்கு இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் மட்டும் சுமார் 6 லட்சம் கேரளத்தவர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.