இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு உறவில் முதலீடு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று பெருமையுடன் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் (வைப்ரன்ட் குஜராத்) கலந்து கொண்ட அவர் பேசியதாவது:
இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு உறவை முதலீடு செய்துள்ளன. இந்த உறவை மேலும் ஆழப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான, மிகவும் பாதுகாப்பான மற்றும் மிகவும் வளமான எதிர்காலம் அமையும் என்று நம்புகிறேன். நம் இரு நாடுகள் மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் இதனால் பலன் கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தை நிறைவேற்ற தேவை யான உதவியை அமெரிக்கா செய்யும். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்.
இந்த ஆண்டு இறுதியில் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்காக இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற கடமைப்பட்டுள்ளோம். அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வரும்போது, இதுகுறித்து மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். தவிர அணுசக்தி ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும் கடல் வழி பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்படுவது குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தி வருகிறது. இதுதவிர, தீவிரவாதம் மற்றும் கடல் கொள்ளையை ஒழிப்பது, ஆயுத உற்பத்தியை கட்டுப் படுத்துவது ஆகிய விவகாரங்களில் இருதரப்பு உறவை பலப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.