இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஜம்மு மாவட்டத்தில் அர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தினர்.

இன்று காலை 7 மணி வரை இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இருதரப்பிலும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

நேற்று மாலை எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்" என்றார்.

இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரவிருக்கும் நிலையில், பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT