சாமியார் அசரம் பாபுவுக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடந்தது. மருத்துவ ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு அவருக்கு ஜாமின் வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோத்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தற்போது அசரம் பாபு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அசரம் பாபுவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த மருத்துவ ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு ஜாமின் வழங்கலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 3ம் தேதியே அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட இருந்தது. ஆனால் தன்னால் சாலை வழிப் போக்குவரத்து மூலம் பயணிக்க முடியாது என்று கூறி அசரம் பாபு, பரிசோதனைக்கு மறுத்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.