டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட நிர்பயா வழக்கை தானாக முன்வந்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவான தீர்ப்பு பெற்றுத் தந்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன், ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993, இந்தியாவில் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? அதைப் பற்றிய விழிப்புணர்வு எப்படி உள்ளது?
இந்த சட்டம் அமலாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும், மனித உரிமையை பாதுகாப்பதில் வெற்றி பெற்றுள்ளோம் என உறுதியாகக் கூற முடியாது. நமது நாட்டில் சட்டங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் குறைவில்லை. ஆனால் அவற்றை அரசு இயந்திரம் சரியாக அமல்படுத்துவதில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், ஏழை எளிய மக்கள், சமூக-பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன.
நம் நாட்டில் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. மாநில அரசுகள் விளம்பரங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பத்திரி கைகள் மூலம் இதை அவர்களுக்கு உணர்த்தலாம். தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள், அதிகாரிகள், தன்னார்வக் குழுக்கள் மூலமும் இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.
நீங்கள் இந்த ஆணையத்தின் உறுப்பின ராக பதவி ஏற்ற பிறகு இதுவரை அளித்த தீர்ப்புகளில் வித்தியாசமான இரு வழக்குகள் பற்றி கூற முடியுமா?
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்காக, நாடு முழுவதிலிருந்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்து முன்பதிவு செய்யாத ரயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டிகளில் ஆடு மாடுகளைப் போல் திணித்து, அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் ஆணையரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன்.
இதில் அந்த மாணவ, மாணவிகளுடன் அவர்களுக்குப் பாதுகாப்பாக சென்ற ஆசிரியர்களுடைய மனித உரிமைகளும் மீறப்பட்டது என்பது ஆணைத்தில் நான் சந்தித்த வித்தியாசமான வழக்கு. இதில் ஆணையம் தலையிட்ட பிறகு அனைவரும் ரயிலில் வீடு திரும்ப முன்பதிவு செய்யப்பட்டது.
மற்றொரு வழக்கில், ராஜஸ்தானின் பிவாரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி 11, 2012-ல் இறந்து போன ஜன்தா தேவி என்பவரது உடலை பிணவறையின் அதிகுளிர் சாதன கிடங்கில் வைக்காமல், அதன் முன்பிருந்த மேஜையில் வைத்து விட்டனர். இதனால், அங்கிருந்த பெருச்சாளிகள் அந்த உடலின் வலது காது மற்றும் இடது கண்ணை பிய்த்து தின்று விட்டன. இதன் மீதான புகாரில் அது ஒரு கடுமையான மனித உரிமை மீறல் என்பது தெரிந்தது.
இதற்காக, அம் மாநில அரசுக்கு நான் அளித்த உத்தரவின்படி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்பெண் ணின் குடும்பத்தாருக்கு ரூ. ஒரு லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.
மனித உரிமைகள் மிக அதிகமாகவும், குறைவாகவும் மீறப்படும் மாநிலங்கள் எவை? தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல் நிலை எப்படியுள்ளது?
உத்தரப் பிரதேசத்திலிருந்து அதிகமாக இதுவரையில் 7,65,078 புகார்கள் ஆணையத்துக்கு வந்துள்ளன. மக்கள் தொகை குறைவாக இருப்பதால் லட்சத் தீவிலிருந்து 95 புகார்கள் மட்டும் வந்துள்ளன. தமிழ்நாட்டிலிருந்து 1993 முதல் இதுவரை 31,934 புகார்கள் வந்துள்ளன. இருப்பினும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதுடன் மருத்துவ வசதி, கல்வி வசதி, பொது விநியோகத் திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவை அளிக்கப்படுகின்றன.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை தானா?
பாதிக்கப்பட்டவரது புகாரின் பேரில் அல்லது ஆணையம் தானாகவே முன்வந்தும் மனித உரிமை மீறலை விசாரிக்கலாம். நீதிமன்ற அனுமதியுடன் மனித உரிமை மீறல் வழக்கு விசாரணையில் உதவலாம். அரசியல் சட்டம் அல்லது சட்டங்களில் மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கலாம். இதற்காக ஆணையத்துக்கு சிவில் நீதிமன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய மாநில அரசுகளின் அனுமதியுடன், விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தவறிழைக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யலாம். உத்தரவுகளுக்காக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களையும் அணுகலாம்.
இருப்பினும், ஆணையத்துக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அவற்றை அமல்படுத்தும் அதிகாரம் அதற்கு கிடையாது. அத்தகைய அதிகாரம் இல்லாததால் ஆணையத்தில் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய முடிவதில்லை. இதற்காக சட்டத்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு நிகழ்ந்துள்ள சமூக மாற்றங்கள் குறித்து கூற முடியுமா?
காவல் நிலையங்களில் நடைபெறும் ‘லாக் அப்’ மற்றும் ‘என்கவுன்ட்டர்’ சாவுகளில், அவசியத்தை பொறுத்து நஷ்ட ஈடு வழங்குவது, தவறு இழைத்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை, வழக்கு போன்றவற்றை எடுக்க ஆணையிடுகிறது. இதன் மூலம் காவல் நிலைய சாவுகள், என்கவுன்ட்டர் சாவுகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.