ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் நேற்று போகிப் பண்டிகையின்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் நெருப்பில் விழுந்து உயிரிழந்தார்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று போகிப் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லூர் மாவட்டம், தடா கண்டிகை கிராமத்தில் பெண்கள் சிலர் ஒன்றுகூடி விறகுகளை அடுக்கி தீயிட்டு போகிப் பண்டிகையை கொண்டாடினர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் முனியம்மா (53) என்பவர் தவறி நெருப்பில் விழுந்தார். இதில் இவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக இவரை அங்கிருந்தவர்கள் தடா அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தடா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரி கூட்டு ரோடு பகுதியில் நேற்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து வெங்கடகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டாவில் நேற்று காலை மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அருகில் இருந்த எலக்ட்ரானிக் கடையும் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் இதில் லட்சக் கணக்கான பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து ரேணிகுண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.