இந்தியாவுக்குள் இடம்பெயரும் மக்களை பாஜக அன்னியப்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளை ராகுல் கேட்டறிந்து வருகிறார். அதன்படி ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் கானார் கிராமத்தில் அப்பகுதி மக்களுடன் அவர் திங்கள்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
அதிகாரத்தை தனி நபரிடம் (நரேந்திர மோடி) அளிக்கவே பாஜக விரும்புகிறது. ஒரு நபர் அல்லது 2 பேர் சேர்ந்து நாட்டை ஆளலாம் என்பது அவர்களுடைய ஆணித்தரமான கருத்து. அவர்களைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த அறிவும் ஒரே நபரிடம்தான் குவிந்திருக்கிறது. அவரால்தான் எல்லாம் முடியும் என்று நம்புகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸின் கொள்கைகள் நேர்மாறானவை. நாங்கள் ஆட்சி அதிகாரத்தை மக்களிடம் அளிக்கவே விரும்புகிறோம்.
மக்களைப் பிரிக்கும் பாஜக
இந்தியாவுக்குள் இடம்பெயரும் மக்களை பாஜக அன்னியப்படுத்தி வருகிறது. குஜராத்தில் வாழும் சீக்கியர்கள் பாஜகவுக்கு அன்னியர்கள். அதேபோல் மகாராஷ்டிரத்தில் வாழும் உத்தரப் பிரதேச மக்களும் அவர்களுக்கு அன்னியர்கள்தான். ஹரியாணாகாரர் ஒருவர் பஞ்சாபுக்கு சென்றால் அவருக்கும் அதேநிலைதான். குஜாரத்தின் கட்ச் மாவட்டத்தில் வாழும் சீக்கியர் களின் நிலஉரிமைகள் பறிக்கப்பட் டுள்ளன. குஜராத் மண்ணை உழுது வளப்படுத்தினோம், ஆனால் இப்போது எங்களை அன்னியர் என்கின்றனர், நாங்கள் இந்தியர்களா அல்லது வெளிநாட்டுக்காரர்களா என்று பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காங்கிரஸை பொறுத்தவரை அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய முறைப்படி வாழ்பவர்கள்கூட இந்தியர்கள்தான்.
இந்திய மக்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் எங்கு சென்றாலும் இந்தியர்தான். நாங்கள் யாரையும் அன்னியராகப் பார்ப்பது இல்லை. இதுதான் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே உள்ள வேறுபாடாகும்.
ராஜீவ் காந்தியை “கம்ப்யூட்டர் பாய்” என்று வாஜ்பாயும் எல்.கே. அத்வானியும் நையாண்டி செய்தனர். கம்ப்யூட்டர் எப்படி இந்தியாவுக்கு உதவும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
ராஜீவ் காந்தி இறந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு வாஜ்பாயும் பிரமோத் மகாஜனும் சேர்ந்து நாங்கள் எப்போதும் கம்ப்யூட்டர்மயத்தை மட்டுமே குறித்து சிந்திக்கிறோம் என்றனர். இன்னும் சில ஆண்டுகளில் உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்டவற்றையும் நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று பாஜக கூறினால் ஆச்சரியமில்லை. வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஆனால் குஜராத்தில் ஆளும் பாஜக அரசு அந்தச் சாதனைக்குச் சொந்தம் கொண்டாடுகிறது என்றார்.