இந்தியா

சுஷ்மா ஸ்வராஜ் சீனாவுக்கு 31-ம் தேதி பயணம்

செய்திப்பிரிவு

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 4 நாள் சுற்றுப் பயணமாக சனிக்கிழமை சீனா செல்கிறார்.

இந்த பயணத்தின்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ-யை சந்திக்கும் சுஷ்மா ஸ்வராஜ் ரஷ்யா-இந்தியா- சீனா முத்தரப்பு ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தியா-சீனா ஊடக அமைப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துசென்ற ஒருவாரத்துக்குள் சுஷ்மா ஸ்வராஜ் சீனா செல்வது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு, பிராந்திய விவாதங்கள், இருநாடுகளுக்கும் பொதுவான உலக விவகாரங்கள் ஆகியவை குறித்து சீன அமைச்சருடன் சுஷ்மா விவாதிப்பார் என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு குறித்தும் இரு தரப்பும் ஆராயும். மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த உடனே, இந்தியாவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமைச்சர் வாங் ஆகியோர் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT