காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (52) மரண வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளத்தைச் சேர்ந்த சசி தரூரும் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கரும் கடந்த 2010 ஆகஸ்ட் 22-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இது இருவருக்குமே மூன்றாவது திருமணம்.
சசி தரூர்- நிருபர் நெருக்கம்
சில ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ம் ஆண்டில் அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த சசி தரூருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் நிருபர் மெஹர் தராருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக சமூக வலை தளங்களில் சுனந்தா புஷ்கர் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். டெல்லியில் நிருபர்களை சந்தித்து சில உண்மைகளை சொல்ல இருப்பதாகவும் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் 2013 ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில் டெல்லி போலீஸார் மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு சுனந்தா வழக்கு விசாரணை வேகம் பெற்றது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விஷஊசி போட்டு கொலை?
இதுதொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஸி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: எய்ம்ஸ் டாக்டர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுனந்தா புஷ்கர் உடலில் விஷம் இருந்தது தெரியவந்துள்ளது. விஷஊசி மூலமாகவோ, உணவில் விஷம் கலந்தோ அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். இது தொடர்பாக சுனந்தாவுக்கு நெருக்கமானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும்.
எந்த அளவுக்கு அவரது உடலில் விஷம் இருந்தது என்பதை கண்டறிய நமது நாட்டில் போதிய வசதிகள் இல்லை. எனவே வெளிநாடுகளுக்கு மாதிரிகளை அனுப்பி சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஆய்வகங்களில் மட்டுமே இதற்கான அதிநவீன கருவிகள் உள்ளன. எனவே சுனந்தா கொலை வழக்கில் அந்த நாடுகளின் உதவி கோரப்படும் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கேள்வி
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் ஆல்வி கூறியபோது, "சுனந்தா புஷ்கர் வழக்கில் ஓராண்டுக்குப் பிறகு கொலை வழக்கு பதிவு செய்வது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன’’ என்று தெரிவித்தார்.
சசி தரூர் அதிர்ச்சி
காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் இதுபற்றி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:
எனது மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனினும் போலீஸ் விசாரணைக்கு வழக்கம்போல் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.
சுனந்தா மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதாக நான் சந்தேகிக்கவில்லை. வழக்கு குறித்து முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன்.எதன் அடிப்படையில் போலீஸார் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பது தெரியவில்லை. சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை நகல்கள் எனக்கோ, சுனந்தா குடும்பத்தினருக்கோ இதுவரை வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.