இந்தியா

வீரதீர செயல்புரிந்த 24 சிறுவர்கள் தேர்வு: நாட்டின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் விருது

பிடிஐ

தேசிய வீர தீர விருதுக்கு 24 சிறார்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் சிறுமிகள், 16 பேர் சிறுவர்கள் ஆவர். இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கும் விருதுகளின் மூலம் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன.

உ.பி.யைச் சேர்ந்தவர் ரேஷ்மா ஃபத்மா (16). பள்ளிச் சிறுமியான இவரிடம் இவரை விட 22 வயது மூத்த உறவினர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியிருக் கிறார். அதை மறுத்த ரேஷ்மாவின் மீது அந்த உறவினர் அமிலத்தை ஊற்றியிருக்கிறார். சிகிச்சைகளுக் குப் பிறகு தேறி வரும் இவர், "இந்த நாட்டில் ஒரு விஷயத்தை மறுப்பதற்குக் கூட பெண்களுக்கு உரிமையில்லையா?" என்று கேட்கிறார். இவருக்கு இந்த ஆண்டு வீர விருது வழங்கப்பட்டுள்ளது.

இவரைப் போன்ற இன்னொரு சிறுமிதான் பந்து உகாடே. மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரத்தில் வசிக்கிறார். இவருடைய வீட்டில் கழிவறை வசதி கிடையாது. எனவே அவருடைய சகோதரியுடன் காட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது அவரின் சகோதரியை சிறுத்தை ஒன்று தாக்கியது. இதைக் கண்டு சுதாரித்த அவர் அருகிலிருந்த மாமரத்தில் இருந்து மாம்பழங்களைப் பறித்து சிறுத்தையின் தலையை நோக்கி வீசினார். இவ்வாறு இரண்டு மூன்று முறை வீசியதற்குப் பிறகு சிறுத்தை அங்கிருந்து ஓடியது.

இந்தச் சம்பவங்களின் மூலம் அமிலம் மிக எளிதாகக் கிடைப்பதும் ஆனால், கழிவறை பல இடங்களில் இல்லாததும் தெரிய வருகிறது. இவர்களைப் போல மேலும் 18 குழந்தைகளுக்கு வீர விருது வழங்கப்பட உள்ளது. தவிர, 4 குழந்தைகளுக்கு அவர்களின் இறப்புக்குப் பிறகு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை வரும் 24-ம் தேதி பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

இந்திய குழந்தை நல கவுன்சிலின் கீழ் 1957-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை இதுவரை 895 குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 634 சிறுவர்கள், 261 சிறுமிகள் ஆவர்.

SCROLL FOR NEXT