ஜம்மு-காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக அந்த மாநில ஆளுநர் என்.என்.வோராவை மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது சந்தித்துப் பேசியுள்ளார். ஜம்மு ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்க வில்லை. மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) 28, பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே தற்காலிக முதல்வராக ஒமர் அப்துல்லா நீடிக்க மறுத்ததால் கடந்த 8-ம் தேதி அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு பிடிபி ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டு கட்சி தானாக முன்வந்து ஆதரவு அளித்தது. அந்தக் கட்சி தனது ஆதரவு கடிதத்தை ஆளுநர் என்.என்.வோராவிடமும் அளித்தது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவை பிடிபி தலைமை ஏற்கவில்லை.
இந்நிலையில் ஆளுநர் என்.என்.வோராவை பிடிபி மூத்த தலைவர் முப்தி முகமது சையது ஜம்முவில் நேற்று சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவும் பிடிபியும் மறைமுகமாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.