டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் தனியார் கால் டாக்ஸியில் சென்றபோது அதன் டிரைவரால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான இளம் பெண், சம்பந்தப்பட்ட டாக்ஸி நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், உபெர் நிறுவனம் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி 36 பக்கங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்துள்ளார். வழக்கை எதிர்கொள்ளும் உபெர் டாக்ஸி நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாகும்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் டக்லஸ் விக்டர் கூறும்போது, "பாலியல் பலாத்கார சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைக்கு உபெர் நிறுவனத்தின் கவனக் குறைவே காரணம். பாலியல் பலாத்கார சம்பவத்தால் சமூகத்தில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை, உடல் நிலை, சமூகத்தின் தாக்கத்தால் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவருக்கு நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. தொழில் ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் தனது வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் உபெர் டாக்ஸி நிறுவனத்தின் செயல்பாடே காரணம். ஆன்லைன் வழி சேவை வழங்கும் அந்த நிறுவன குற்றப் பின்னணி கொண்ட நபரை பணியில் அமர்த்தியது முதல் கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்திலும் அந்த நிறுவனம் கவனக் குறைவாக உள்ளது.
இதனை நவீன மின்னணு சேவை குறைபாடாக கருத வேண்டும். எனக்கு இந்த நிறுவனத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட நிலைக்கு தக்க இழப்பீடு தந்தாக வேண்டும்.
டாக்ஸிகளில் ஜிபிஎஸ் கருவி, கண்காணிப்பு கேமரா அகியவை பொறுத்துவது அவசியமாக்கப்பட வேண்டும். உபெர் போன்ற கால் டாக்ஸிகளில் ஏறும் பெண்களுக்கு அதில் இருக்கும் அபாயம் தெரியவதில்லை. எனக்கு நேர்ந்த நிலை யாருக்கும் ஏற்படலாம் என்பதனை உணர்ந்து தக்க நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் வகை செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரிக்காவில் உள்ள கலிபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பாதிக்கப்பட்ட பெண்ணிம் பெயர் குறிப்பிடப்படவில்லை.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம், பணி முடிந்து கால் டாக்ஸியில் வீடு திரும்பிய பெண்ணை, கால் டாக்ஸியின் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்தார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் இது தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார் யாதவ் (32) என்ற கால் டாக்ஸியின் டிரைவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான ஷிவ் குமார், ஏற்கெனவே 2011-ம் ஆண்டு குர்காவ்னில் 22 வயது இளம்பெண்ணை காரில் அழைத்துச் செல்லும்போது, பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டார். இதற்காக, ஏழு மாதம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் பாதிக்கப்பட்டவருடன் சமாதானம் பேசி விடுதலையானார். இந்த சம்பவத்தில் ஷிவ் குமார் சிக்கியது உபேர் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. இதற்கு, அந்த நிறுவனம் ஷிவ் குமாரை பணியில் சேர்க்கும் முன் சட்டப்படி காவல்துறையினரிடம் பெற வேண்டிய ஓட்டுநரின் நன்னடத்தை சான்றிதழை பெறவில்லை என்பது நினைவுக்கூரத்தக்கது.