"அரசாங்கம் எத்தகைய கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறதோ, அவற்றுக்கே நானும் முன்னுரிமை அளிப்பேன்" என்றார் ஜெய்சங்கர்.
புதிய வெளியுறவுச் செயலராக எஸ்.ஜெய்சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, நேற்றிரவு சுஜாதா சிங் வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமலேயே அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக்கில் ஜெய்சங்கர் புதிய வெளியுறவுச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியில் தொடர்வார்.
முன்னதாக டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் நியமனக்குழு கூட்டத்தில், ஜெய்சங்கரை வெளியுறவுத் துறை செயலாளராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவி குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், "இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம். என் மீது மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அரசு எத்தகைய கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறதோ அவற்றுக்கே நானும் முன்னுரிமை அளிப்பேன்" என்றார்.
முன்னதாக, ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தார். சீனா, சிங்கப்பூர், செக் குடியரசு நாடுகளிலும் அவர் தூதராக பணியாற்றியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் நிலையில், அவர் 8 மாதத்திற்கு முன்பாகவே அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.