பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல் விவகாரங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெல்காமில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜகவின் தலைவர் (மோடி) நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசி வருகிறார். ஆனால் பாஜக ஆளும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் ஊழல்கள் அவரது கண்களுக்குப் புலப்படவில்லையா?
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் (எடியூரப்பா) ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது அரசில் 16 அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களால் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த ஊழல் விவகாரங்
களால்தான் கர்நாடகத்தில் பாஜக அரசை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றினர். பின்னர் தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் இப்போது பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார். ஆனால் பழைய ஊழல் விவகாரங்களை எல்லாம் பாஜக மூத்த தலைவர்கள் மறந்துவிட்டது ஏனோ?
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் ஊழல் விவகாரங்கள் மட்டும்தான் பாஜக தலைவர்களின் கண்களுக்குத் தெரிகிறது. வேறு எங்கு ஊழல் நடந்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். குஜராத்தில் ஊழல் நடந்தால்கூட அந்த விவகாரத்தை அப்படியே ஓரம் கட்டி விடுவார்கள்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஊழலை ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. ஊழலுக்கு எதிரான 6 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அந்த மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் பாஜக தடுத்து வருகிறது. நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்குக்கூட அவர்கள் அனுமதிப்பது இல்லை.
கர்நாடகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது காங்கிரஸ். அதற்காக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் பெரும் முயற்சி மேற்கொண்டனர். இந்த சாதனை ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. காங்கிரஸின் கடின முயற்சியால் சுமார் 60 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் இந்தியாவில் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ததை கடுமையாக எதிர்த்தனர்.
அவர்கள்தான் இன்று இந்தியாவில் அதிசயத்தை நிகழ்த்தப் போகிறோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்படும். அதன்மூலம் பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஏழை, எளியோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைய காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது.
இதற்கு நேர்மாறாக பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் தொழிலதிபர்களின் நலனைக் காக்கும் வகையில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.
அனைத்து மதம், தனிநபர்களின் சுதந்திரம், உரிமைகளை காங்கிரஸ் மதிக்கிறது. ஆனால் பாஜக சகோதரருக்கு எதிராக சகோதரரை தூண்டிவிட்டு மோதச் செய்கிறது. அதன்மூலம் மக்களை பலவீனப்படுத்தி வருகிறது என்று ராகுல் காந்தி பேசினார்.