தனது பரோல் விடுப்பை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறை அதிகாரிகள் நிராகரித்ததால் இந்தி நடிகர் சஞ்சய் தத் (55) நேற்று சிறைக்கு திரும்பினார்.
கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்த தாக சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் கடந்த டிசம்பர் 24-ம்தேதி 14 நாள் பரோல் விடுப்பில் வெளியில் வந்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் வெளியான பீகே திரைப்படத்தைப் பார்ப்பதற்காகவே தத் விடுப்பில் வந்ததாக தகவல் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை யடுத்து, தத் என்ன காரணத் துக்காக விடுப்பில் சென்றார் என தெரிவிக்குமாறு காவல் துறைக்கு மாநில உள்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை இதுகுறித்து அறிக்கை தரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் விடுப்பை நீட்டுக்குமாறு கடந்த 27-ம் தேதி சிறை அதிகாரிகளுக்கு தத் மனு செய்திருந்தார். இந்த மனுவை அதிகாரிகள் நிராகரித்ததாக தெரிகிறது. இதையடுத்து 14 நாள் விடுப்பு முடிந்ததையடுத்து, சிறையில் சரணடைவதற்காக தத் நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.