இந்தியா

பவானிசிங்கை நீக்கக் கோரி திமுக மீண்டும் மனு

இரா.வினோத்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி திமுக‌ பொதுச்செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கெனவே பவானிசிங்கை நீக்கக்கோரி அன்பழகன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி அனந்த பைரரெட்டி கடந்த 19-ம் தேதி விசாரித்தார். அப்போது “அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் நியமனம் குறித்து மனுதாரர் அன்பழகனோ, கர்நாடக அரசோ உச்ச நீதிமன்றத்தை அணுக வேண் டும்'' என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஆர்.கே.தேசாயிடம் நேற்று புதிய மனு(ரிட்) ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக அரசுக்கு அதிகாரமில்லை

திமுக தரப்பின் புதிய‌ மனுவில் கூறியிருப்பதாவது:

“இவ்வழக்கின் நீதிபதி நியமனம், அரசு வழக்கறிஞர் நியமனம் உள்ளிட்ட விவகாரங் களில் தலையிட தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என உச்ச நீதி மன்றம் தனது வழிகாட்டுதல் களில் தெரிவித்துள்ளது.

ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானிசிங்கை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்துள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

எனவே உடனடியாக‌ தமிழ அரசால் நியமிக்கப்பட்ட பவானி சிங்கை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக மனு ஏற்கப்படுமா?

திமுக தரப்பு கடந்த 6-ம் தேதி பவானிசிங்கை நீக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் அகமது விசாரிக்க மறுத்தார். பின்னர் இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த பைரரெட்டி, அரசு வழக்கறிஞரின் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு திமுகவுக்கும், கர்நாடக அர சுக்கும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் திமுக தரப்பு மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தும் மனுவை தாக்கல் செய்திருப்பதால், அம்மனு ஏற்கப்படுவதில் சிக்கல் இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT