பாஜக டெல்லி மாநில முன்னாள் தலைவர் விஜேந்தர் குப்தாவுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஷீலா தீட்சித்துக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
தில்லி மாநகராட்சித் தேர்தலின் போது, நாகரிகமற்றவகையில் அவதூறாக பேசியதாக விஜேந்தர் குப்தாவுக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தில்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார் ஷீலா தீட்சித். இம் மனுவுக்கு விஜேந்தர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, “நீதி மன்றம் உத்தரவிட்டும் அதை மதிக்காமல் ஷீலா தீட்சித் பல்வேறு காரணங்களைக் கூறி வருகிறார். அவருக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விசாரணை நீதிமன்றம் காரண மற்ற வகையில் அபராதம் விதித் திருப்பதாகக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்தார்.
விசாரணை நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அபராதம் விதித்தது. கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி வரை அவர் கேரள ஆளுநராக இருந்தது குறிப்பிடத்தக்கது.