கன்னியாகுமரியில் அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கடல் மீது பாலம் அமைக்க வேண்டும் என்று உத்தராகண்ட் மாநில பாஜக எம்.பி. தருண் விஜய், மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குமரிமுனையில் 2000-வது ஆண்டு ஜனவரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கடலில் 400 மீட்டர் தொலைவுக்கு படகில் பயணம் செய்து வள்ளுவர் சிலையை பார்வையிடுகின்றனர்.
விவேகானந்தர் பாறைக்கு அருகிலுள்ள இச்சிலைக்கு பாலம் அமைக்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கை எழுந்து வருகிறது. இக்கோரிக்கையை எம்.பி. தருண் விஜய் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் தருண்விஜய் கூறும்போது, “வள்ளு வர் சிலைக்கு பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். அதற்கு முன்பாக, சுற்றுலாத் துறை செய லாளர் லலித் பவார், கலாச்சார கலாச்சாரத்துறை செயலாளர் ரவீந்திரா சிங் உள்ளிட்டவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பாலம் அமைப்பதற்கான மத்திய அரசின் முயற்சி, திருவள்ளுவர் சிலையை காண வரும் கோடிக் கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனது இம்முயற்சிக்கு அனைத் துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித் துள்ளன” எனத் தெரிவித்தார்.
மத்தியில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்த போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய், 1979-ம் ஆண்டு குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் இப்பணி தடை பட்டது. 1990ல் திமுக ஆட்சியில் மீண்டும் இப்பணி தொடங்கியது. இந்த சிலையை வடித்த வி.கணபதி ஸ்தபதி பத்து வருடங்களில் இப்பணியை முடித்தார்.
சுமார் 7,000 டன் எடையுள்ள இந்த வள்ளுவர் சிலையை அமைப் பதற்கு அனுமதி கோரப்பட்டபோது, அதன் அருகில் அமைந்துள்ள கலங்கரை விளக்குக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அனுமதி தரப்பட்டது.