சந்தாதாரர்கள் 50 வயதுக்கு முன்னதாகவே தங்கள் பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்பப் பெற தடை விதிப்பது குறித்து பிஎப் அமைப்பு பரிசீலித்து வருகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) மறு ஆய்வு கூட்டம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய பிஎப் ஆணையர் கே.கே.ஜலான் இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து ஜலான் கூறிய தாவது:
இப்போது ஊழியர்கள் (பிஎப் சந்தாதாரர்கள்) ஒரு நிறுவனத்திலிருந்து விலகி வேறு நிறுவனத்துக்கு செல்லும்போது தனது பிஎப் கணக்கில் உள்ள முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தாதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இனிமேல் 50 வயதுக்கு முன்னதாக முழு தொகையையும் பெறுவதைக் கட்டுப்படுத்த விதிமுறைகளில் திருத்தம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இது நடைமுறைக்கு வந்தால், சந்தாதாரர்கள் 50 வயதுக்கு முன்னதாக தங்களது கணக்கில் உள்ள பிஎப் பணத்தை திரும்பப் பெற வேண்டி விண்ணப்பித்தால், அவரது கணக்கில் உள்ள மொத்த தொகையில் 90 சதவீதம் மட்டுமே வழங்கப்படும்.
மீதம் உள்ள 10 சதவீத தொகை அவரது யுனிவர்சல் கணக்கிலேயே (யுஏஎன்) இருப்பு வைக்கப்படும். வேறு நிறுவனத்தில் வேலைக்கு செல்லும்போது இந்தத் தொகை அவரது கணக்கிலேயே தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த யோசனைக்கு பிஎப் அமைப்பின் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அறக்கட்டளை வாரியத்தின் (சிபிடி) ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
யுனிவர்சல் கணக்கு எண் முறை நடைமுறைக்கு வந்துவிட்டாலே முன்கூட்டியே பிஎப் பணத்தை திரும்பப் பெறுவது குறையும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள எந்த நிறுவனத்துக்கு வேலை மாறினாலும் ஒரே கணக்கிலேயே பிஎப் சந்தாவை செலுத்த முடியும். வேலை மாறும்போது தங்கள் பிஎப் கணக்கை மாற்றக் கோரி விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் தங்கள் கணக்கில் உள்ள தொகையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள முடியும்.