இந்தியா

வாக்காளர்களை லஞ்சம் வாங்கச் சொல்லக் கூடாது: கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

பிடிஐ

'அரசியல் கட்சிகள் வாக்களிப்பதற்காக பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று வாக்காளர்களிடம் லஞ்சம் வாங்கச் சொல்லக் கூடாது என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் பட்சத்தில், கேஜ்ரிவால் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கேஜ்ரிவால் பேசும்போது, "இது தேர்தல் நேரம். பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உங்கள் வாக்குக்காக பணம் அளிக்க வரும்போது, 'வேண்டாம்' என்று சொல்லாதீர்கள். ஏற்றுக் கொள்ளுங்கள்.

2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் என பலவற்றிலிருந்து கொள்ளையடித்துள்ளனர். அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்" என்று பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, பாஜகவும் காங்கிரஸும் கேஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக புகார் அளித்திருந்தன.

இந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், 'இனி இவ்வாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கேஜ்ரிவாலை செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது.

இது தொடர்பான தேர்தல் ஆணைய உத்தரவில், "பல முறை எச்சரித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை நீங்கள் மீறியுள்ளது தெரியவந்துள்ளது. மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதை, தேர்தல் ஆணையம் கடுமையாகக் கண்டிக்கிறது. இனி எந்தவிதமான பிரச்சாரத்திலும் இத்தகைய முறையைப் பின்பற்றப்படக் கூடாது என உங்களுக்கு உத்தரவிடுகிறோம்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை பெற்றுக்கொண்ட கேஜ்ரிவால், தேர்தல் ஆணையத்தை தாம் மதிப்பதாகவும், இனி இவ்வாறான பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 'வாக்காளர்களை லஞ்சம் வாங்க தூண்டும் வகையில் கேஜ்ரிவால் பேசியது, தேர்தல் நடத்தை விதிகளின்படி, சட்டப்படி குற்றம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அவரது பேச்சு, ஜனநாயக நடைமுறைகளை சீரழிப்பதாக உள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தங்கள் புகாரில் பாஜகவும் காங்கிரஸும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT