இந்தியா

சம்பவம் நிகழ்த்த ரூ.10 லட்சம் தேவை- பாக். படகில் வந்தவர்களின் பேச்சுப் பதிவு

செய்திப்பிரிவு

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் வந்த மர்ம நபர்கள் உரையாடல்களை இடை மறித்து கேட்டதில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியிருப்பதாக கூறுகிறது கடலோர காவற்படை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, குஜராத் கடல் பகுதிக்குள் 4 பேருடன் நுழைய முயன்ற சிறிய ரக கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் இடைமறித்தபோது அந்த கப்பல் வெடித்துச் சிதறியது.

இதனைத்தொடந்து, குஜராத் அருகே அரபிக் கடலில் வெடித்துச் சிதறிய கப்பலில் இருந்தவர்கள் தீவிரவாதிகள்தான் என்பதற்கும் அவர்கள் பாகிஸ்தான் கடற்படை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததற்கான சூழ்நிலை ஆதாரம் இருப்பதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இந்நிலையில், செயற்கைக்கோள் தொலைத்தொடர்புகளை இடை மறித்து கேட்டதில், அந்தக் கப்பலில் வந்தவர்கள் "இந்த ஆபரேஷனை செய்து முடிக்க 4 லட்சம் போதாது 10 லட்சம் தேவைப்படுகிறது" என கூறியது வெளியாகியுள்ளது.

10 லட்சம் என்பது பணமாக இருக்கலாம் இல்லை ஏதாவது சங்கேத மொழியாக இருக்கலாம் என புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

சாதாரண படகு போதைப் பொருட்களை கடத்திச் சென்றால் கூட, கடலோர காவல்படையினர் இடைமறிக்கும்போது, போதைப் பொருட்களை கடலில் வீசிவிட்டு சரணடைந்து விடுவதுதான் வழக்கம். கடத்தல்காரர்கள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். எனவே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதிகள் சதி இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக புலானாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் படகை தடுத்து நிறுத்துவதில், அதை எதிர்கொள்வதிலும் மற்ற பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான தகவல்களை பறிமாறிக் கொள்ளாமல், தான் மட்டுமே முன் இருந்து மொத்த ஆப்பரேஷனையும் நடத்த கடலோர காவற்படை விரும்பியதாக கடும் குற்றச்சட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், கடலோர காவற்படை புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள இத்தகவல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT