இந்தியா

காஷ்மீரில் மறைமுகப்போருக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கிறது: ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் குற்றச்சாட்டு

தினகர் பெர்ரி

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்படும் மறைமுகப்போருக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதாக ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் குற்றம்சாட்டி இருக்கிறார்.

நிருபர்களுக்கு நேற்று அளித்த வருடாந்திர பேட்டியில் அவர் கூறியதாவது:

எல்லை பரபரப்பாக இருப்ப தால் அச்சுறுத்தல்களும் சவால்களும் அதிகரித்துள்ளன. தனது மண்ணில் பலி அதிகரித்த போதிலும் ஜம்மு காஷ்மீரில் மறைமுகப்போர் நடப்பதை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது.

கடந்த மாதம் பெஷாவரில் ராணுவ பள்ளிக்கூடம் ஒன்றில் தீவிரவாதிகள் மிகக் கொடிய தாக்குதல் நடத்தியதில் பள்ளிசிறுவர்கள் இறந்தனர். காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டித்தது. இந்த சம்பவத்தை அடுத்தாவது பாகிஸ்தான் மனந்திருந்துமா என காத்திருக்கிறோம்.

ஆப்கானிஸ்தான் நிலைமையை இந்திய ராணுவம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலின்போது வாக்காளர் களுக்கு அச்சமற்ற நிலைமையை பாதுகாப்புப்படை வீரர்களும் இதர படையினரும் ஏற்படுத்தித் தந்தனர். வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனர். பல மாதங்களாக பாதுகாப்புப்படையினர் தொய்வின்றி செயல்பட்டதே இதற்குக் காரணம்.

சமீபத்திய ஆண்டுகளில் 2014-ல்

தான் ஜம்மு-காஷ்மீரில் மிக அதிக அளவில் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டனர். மொத்தம் 110 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 104 பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 65 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் வெலவெலத்துப் போய் செய்வதறியாது விரக்தியில் உள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாத கட்டமைப்பு நிலைகுலையாமல் செவ்வனே செயல்படுகிறது என்பதற்கு சாட்சிதான் ஜம்முவில் ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, படிப்படியாக தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் சர்வதேச எல்லை வரை வந்துள்ளனர். ஊடுருவல் முயற்சியை தடுக்க ராணுவம் மேற்கொண்டுள்ள செயல்பாடுகளால், அவர்களால் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை நெருங்கமுடியவில்லை. இப்பகுதியில் இந்திய ராணுவத்தை மீறி தீவிரவாதிகள் ஊடுருவ முடியாது.

ஆனால், சர்வதேச எல்லையில் ஊடுருவல் நடப்பதற்கு வாய்ப்பாக திறந்த வடிகால்களும் ஓடைகளும் உள்ளன. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தளபதிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை என்பது தவறானது. எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் படைவீரர்களை தாக்குவதற்கு விரும்பிய வகையில் செயல்பட அவர்களுக்கு சுதந்திரம் தரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் விவகாரம்

ஆப்கானிஸ்தானில் நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது. அந்நாட்டிலிருந்து தமது படைகள் வாபஸாகலாம், ஆப்கானிஸ்தான் படையினரே இனி பாதுகாப்பில் ஈடுபடலாம் என்ற அளவுக்கு அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது. இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயற்சிக்கக்கூடும். எனவே விழிப்பாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT