இந்தியா

ஆந்திர மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணை: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உறுதி

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.

விஜயவாடாவில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பின்னர் அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தோழமைக் கட்சியான தெலுங்கு தேசத்தின் பலத்தை குறைப்பது நமது நோக்கமல்ல. கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை கட்சியை பலப்படுத்தி, வரும் 2019-ம் ஆண்டு தேர்தலில் அதிக சதவீத வாக்குகளை பெற வேண்டும் என்பதே லட்சியமாகும். தற்போது நடைபெற்ற தேர்தலில் தெலங்கானாவில் பாஜக 22 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவாக பாஜக முக்கிய பங்காற்றி உள்ளது. இதனால் அடுத்த தேர்தலில் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைய கட்சி நிர்வாகிகள் பாடுபடுவர்.

ஆந்திராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணை புரியும். வரும் தேர்தல்களிலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டனி தொடரும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து விரைவில் நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாஜகவின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் கட்சியில் இணையலாம். இதற்கு தெலுங்கு தேசம் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பது வீண் புரளி என்றார் அமித் ஷா.

SCROLL FOR NEXT