இந்தியா

பிரதமர் மோடியுடன் ரேடியோவில் உரையாற்றுகிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா

செய்திப்பிரிவு

இந்த மாதம் அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் மோடி உரையாற்றும்போது, அவருடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் முதல் உரையாற்றி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் இதை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இந்த மாதம் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) நிகழ்ச்சி சிறப்பு மிக்கது. குடியரசு தின விழா விருந்தினர் பராக் ஒபாமாவும் என்னுடன் சேர்ந்து உங்களுக்காக உரையாற்றுவார். 27-ம் தேதி இந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். அந்த நாளை, நான் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

கேள்விகள் வரவேற்கப்படுகின்றன:

பிரதமர் மோடி பதிவு செய்துள்ள மற்றொரு ட்வீட்டில், "இந்நிகழ்ச்சியில் எங்கள் இருவரிடமும் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை அனுப்புங்கள். 'மை கவ்' இணையதளத்தில் கேள்விகளை பதிவு செய்யலாம். அதுமட்டுமல்லாது, #AskObamaModi என்ற ட்விட்டர் பக்கத்திலும் கேள்விகளை 25-ம் தேதி வரை பதிவு செய்யலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது, ஒபாமாவுடன் இணைந்து பத்திரிகைக்கு கூட்டாக தலையங்கம் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT