இந்தியா

ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காதது ஏன்?- சோனியா காந்திக்கு தலைமை தகவல் ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

தகவல்பெறும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன் என்று விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு தலைமை தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஐ(எம்), தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய 6 தேசிய கட்சிகளும் பொது அமைப்புகள் என்று சிஐசி கடந்த ஆண்டு அறிவித்தது. ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பொது அமைப்புகள் மனுதாரர் கோரும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிஐசி உத்தரவின்படி ஆர்டிஐ மனுக்களுக்கு பதில் அளிப்பதற்கான எவ்வித ஏற்பாட்டையும் அரசியல் கட்சிகள் செய்யவில்லை. சட்டத்தில் திருத்தமும் செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடும் செய்யவில்லை.

சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜெயின், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதற்கு பதில் கிடைக்காததால் சிஐசி-யில் புகார் செய்தார். இதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 6 மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சிஐசி-க்கு உத்தரவிட்டது.

இதுகுறித்து தகவல் ஆணைய செய்திக்குறிப்பில், “நீதிமன்ற உத்தரவின்படி ஜெயின் புகார் கடிதத்துக்கு உரிய பதிலை அனுப்பி வைக்க வேண்டும். அதன் நகலை 4 வாரத்துக்குள் சிஐசிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதுபோல சுபாஷ் அகர்வால் என்பவர் தனியாக தொடுத்த வழக் கின்படி பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் இதர 4 தேசிய கட்சிகளின் தலைமைக்கும் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பதில் அளிக்கத் தவறுவது குற்றம் ஆகும். இதற்காக சம்பந்தப்பட்ட பொது அமைப்பின் (அரசியல் கட்சிகள்) தகவல் அதிகாரி ஒரு நாளைக்கு ரூ.250 அபராதம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT