இந்தியா

ராம் ரஹீமின் ‘மெசஞ்சர் ஆஃப் காட்’ படத்தை திரையிட அனுமதி: பஞ்சாபில் சீக்கியர்கள் ஆர்பாட்டம்

கவுரவ் விவேக் பட்னாகர்

குர்மீத் ராம் ரஹிம் சிங் இன்சான் என்ற சாமியாரின் ‘மெசஞ்சர் ஆஃப் காட்’ திரைப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் சீக்கியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் படம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்சார் வாரியத்தின் மறு ஆய்வுக்கு இந்தப் படம் அனுப்பப்பட்டதால் ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் சில சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் அகால் தக்த் இந்தப் படத்திற்கு தடை கோரியது. ஏனெனில் ராம் ரஹீம் சிங் சீக்கியர்களின் குருவான குரு கோவிந்த் சிங் போல உடை அணிந்து சீக்கியர்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தியதாக இந்த அமைப்பு புகார் எழுப்பியது.

அமிர்தசரஸில் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி எதிர்ப்புப் பேரணி நடத்தியது. இதனையடுத்து அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பாட்டாலாவிலும் இது போன்ற பேரணி நடைபெற்றது.

ஹரியாணாவிலும் படத்திற்குத் தடை கோரி சீக்கிய அமைப்பு ஒன்று பேரணி நடத்தியது. இந்திய தேசிய லோக்தள் கட்சியும் படத்திற்கு தடை கோரி ஆர்பாட்டம் செய்வதாக அறிவித்ததையடுத்து பதட்டம் அதிகரித்துள்ளது. சாமியார் ஆதரவுப் பிரிவினருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு சாமியார் ராம் ரஹீம் கேட்டுக் கொண்டதையடுத்து இந்திய தேசிய லோக்தள் கடும் கோபமடைந்தது. ஆசிரியர் பணித்தேர்வு ஊழல் தொடர்பாக சிறையில் இருக்கும் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையிலிருந்து ஆட்சி செய்வேன் என்று அறிக்கை விடுத்தார். ஆனால் பாஜக 47 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி கண்டது.

இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பின் தலைவர் திக்விஜய் சவுதாலா படத்திற்கு அனுமதி கொடுத்தது பற்றி கூறும்போது, “சில பகுதிகளை நீக்கிவிட்டு ராம் ரஹீமின் இந்த சர்ச்சைக்குரிய படத்திற்கு அனுமதி அளித்தன் பின்னணியில் அரசியல் உள்ளது, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 25 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராம் ரஹீமைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.” என்றார்.

தற்போது மெசஞ்சர் ஆஃப் காட் திரைப்படம் வெளியாக அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளுக்கு பெரிய ஆர்பாட்டம், எதிர்ப்புகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை அனுப்பியுள்ளது. படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT