மத்தியில் நரேந்திர மோடியை பதவியில் அமர்த்துவதும், அவரது குஜராத் மாநில வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதும் வகுப்புவாதத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் ஊக்கம் கொடுக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.
கோல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காரத் பேசியதாவது:
நரேந்திர மோடி ஆட்சி புரியும் குஜராத்தில் லாபம் அடைந்தது பெரிய நிறுவனங்கள்தான். பொது மக்கள் அல்ல.
சாமானிய மக்களின் நலனில் அக்கறை வைக்கக்கூடிய ஆட்சியை இடதுசாரி தலைமையிலான மதச்சார்பற்ற மாற்றுக் கூட்டணி மட்டுமே தர முடியும்.
நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் முடிந்ததும் தங்களது மாற்றுக் கொள்கைகள் என்னவென்பதை காங்கிரஸ் அல்லாத,பாஜக அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் அறிவிக்கும்.
இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணி 3-ம் தரமானதாக இருக்கும் என மோடி கூறியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. கோல்கத்தா வில் சில தினங்களுக்கு முன் அவர் சொன்ன இந்த கருத்து சொல்லப்போனால் சரியானதுதான்.
பள்ளிக் கூடங்களில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என வகைப்படுத்துவார்கள். அந்த வரிசையில் 3ம் தரம் என்பது மேம்பட்டதுதான். இடதுசாரிகள் 3-ம் வகுப்பில் இருக்கிறார்கள். மோடி இன்னும் முதல்வகுப்பில்தான் இருக்கிறார்
குஜராத் மாதிரி திட்டம் என்று பேசுகிறார்கள். 2002ல் மோடி தலைமையிலான ஆட்சி யில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் கொல்லப் பட்டனர். மக்களுக்கு நலம்தரும், மதச்சார்பற்ற மாற்றுக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக நாம் போராடவேண்டும்.
தனது கடந்த 10 ஆண்டு ஆட்சியில் ஊழல், மதவாதத்தை ஒடுக்குவதில் காங்கிரஸ் கட்சி தோல்வி கண்டுள்ளது. மத அடிப்படைவாதத்தையும் வகுப்பு வாதத்தையும் ஒடுக்க இடது சாரிகளால் மட்டுமே முடியும் என்றார்.