உள்நாட்டு அல்லது உள்ளூர் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை உலக அளவிலேயே அசாமில் தான் அதிகம் என்று ஆசிய மனித உரிமைகளுக்கான மையம் குறிப்பிட்டுள்ளது.
பேரிடர்கள், உள்ளூர் கலவரங்கள், அரசியல் 2மற்றும் சமூக சார்ந்த பிரச்சினைகளால் கடந்த ஆண்டு 2014-ல் 3 லட்சத்துக்கும் அதிகமான அசாம் மக்கள் தங்களது மாநிலத்துக்குள்ளேயே இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாக ஆசிய மனித உரிமைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை அந்த மையம் இன்று (வெள்ளிக்கிழமை) குவாஹாட்டியில் வெளியிட்டது.
அசாம் மாநிலத்தின் சோனித்ப்பூர், கோக்ரஜார், உதல்குரி, சிராங் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் 85 முகாம்களில் அவர்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
அசாம் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதற்கு மனிதர்காளல் ஏற்படுத்தப்பட்ட பேரவலமே காரணாமாக இருப்பதாக அறிக்கையை வெளியிட்டு பேசிய ஆசிய மனித உரிமைகளுக்கான மையத்தின் தலைவர் சுஹாஸ் சக்மா தெரிவித்தார்.
மேலும் அவர் இது குறித்து பேசுகையில், "அசாமில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்து வாழும் மக்கள் பெரும்பாலும் ஆதிவாசிகளாக இருக்கின்றனர். கடந்த மாதம் 23ஆம் தேதி நடந்த கலவரங்களில் கூட 80-க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களை முகாம்களில் சந்திக்க சென்றபோது, எங்களை மிகவும் குறுகிய அளவுக்கு மட்டுமே ஊருக்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். பாதுகாப்பு காரணங்களை கூறி அவர்கள் எங்களை தவிர்த்தனர். இருப்பினும் அங்கு உள்ள ஆதிவாசிகளுக்கு உரிய தேவைகள் வழங்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு அசாம் மாநில அரசு தக்க மனித நேய அடிப்படையிலான உதவிகளை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்" என்றார்.