இந்தியா

தணிக்கை வாரிய விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது: அருண் ஜேட்லி

பிடிஐ

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன் உட்பட 13 பேர் ராஜினாமா செய்துள்ள விவகாரம் காங்கிரஸாரால் அரசியலாக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சாடியுள்ளார்.

தேரா சச்சா சவுதா தலைவர் ராம் ரஹீம் சிங் படமான மெசஞ்சர் ஆஃப் காட் திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்ட விவகாரமே இப்போது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் அருண் ஜேட்லி தனது முகநூலில் இது பற்றிய எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி திரைப்பட சான்றிதழ் அளிக்கும் விவகாரத்தைப் பொறுத்தவரை தன்னை குறிப்பிடத்தகுந்த தொலைவில் வைத்துக் கொண்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திரைப்பட தணிக்கை வாரியத்தை அரசியல்மயமாக்கியுள்ளது. நாங்கள் அவ்வாறு செயல்பட விரும்பவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியினால் நியமிக்கப்பட்டவர்கள் சாதாரண, தினசரி விவகாரத்தைக் கூட அரசியலாக்குவது வருந்தத் தக்கது.

திரைப்பட தணிக்கை வாரியம் தனது சட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்துள்ளது. இது முறையான நடைமுறையின் ஒரு பகுதியே மாறாக வாரியத்தின் தன்னாட்சி மீதான தலையீடு எதுவும் கிடையாது.

திரைப்பட தணிக்கை வாரிய கூட்டங்கள் நடைபெறுவதில்லை என்று வெளியேறியவர்கள் கூறுவது என்பது சுய-கண்டனமே. கூட்டங்களை அமைச்சரோ, செயலரோ கூட்டமுடியாது. வாரியத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்தான் கூட்டங்களைக் கூட்ட வேண்டும். கூட்டங்கள் நடைபெறவில்லை என்றால் அதற்கு பொறுப்பானவர்கள் தங்களிடமே குறைகாண வேண்டியதுதான்.

திரைப்பட தணிக்கை வாரியத்தில் ஊழல் இருக்கிறது என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நியமித்த நபர்கள் தங்கள் மீதுதான் குற்றம்காண வேண்டும். ஒரு முறை கூட என்னிடம் அவர்கள் ஊழல் பற்றிய பிரச்சினைகளை எழுப்பவில்லை. செயலற்ற அதன் தலைவர் ஒருமுறை கூட அதனை எழுப்பவில்லை.

திரைப்பட தணிக்கை வாரியத்தின் எந்த ஒரு உறுப்பினரையும் நான் சந்திக்கவும் இல்லை அவர்களுடன் பேசவும் இல்லை.

SCROLL FOR NEXT