இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி? - இடைக்கால முதல்வர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஒமர் அப்துல்லா

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநில இடைக்கால முதல்வர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கும்படி மாநில ஆளுநர் என்.என்.வோராவிடம் தெரிவித்துள்ளார் ஒமர் அப்துல்லா. புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடர்ந்துவரும் நிலையில் ஒமர் அப்துல்லாவின் இந்தமுடிவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானை ஒட்டிய எல்லையில் தாக்குதல் நடப்ப தால் அத்தகைய சூழலை எதிர்கொள்வதற்கு முழு நேர நிர்வாகி தேவைப்படுகிறார் என்று ஆளுநரிடம் ஒமர் குறிப்பிட்டுள்ளார். 12 நாள் பயணமாக லண்டன் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் தமது பெற்றோருக்கு துணை யாக இருந்துவிட்டு இந்தியா திரும்பிய ஒமர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மாநில ஆளுநர் என்.என்.வோராவை சந்தித்து தனது முடிவை தெரிவித்தார். இந்த தகவலை வலைதளத்தில் ஒமர் பதிவு செய்துள்ளார்.

இடைக்கால முதல்வர் பதவியில் தற்காலிகமாகவே செயல்பட ஒப்புக்கொண்டிருந்தேன். அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி ஆளுநரை கேட்டுக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். 10 நாட்களுக்குள் புதிய அரசு அமையும் என்ற அனுமானத்தில் இருந்தேன். ஆனால் அதையும் தாண்டி பலநாட்கள் ஆகும் என்கிற நிலைதான் காணப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

எல்லையிலிருந்து 10 ஆயிரம் பேர் வெளியேறி இருப்பது, கடுங் குளிர் பருவநிலையால் மக்கள் படும் துன்பங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி தொடர வேண்டிய நிலைமை ஆகியவற்றை பார்க்கும்போது முழு நேர நிர்வாகிதான் அவற்றை சமாளிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். மாநில சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு கட்சி தோல்வியை தழுவியதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர். ஆனால் இடைக்காலத்துக்கு முதல்வர் பதவி யில் தொடரும்படி டிசம்பர் 24-ம் தேதி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன. மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, பாஜக 25 உறுப்பினர்களை கொண்டுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்கள் உள்ளன. 87 உறுப்பினர் கொண்டது சட்டசபை, ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மக்கள் ஜனநாயக கட்சிக்கு தேசிய மாநாடு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தன. ஆனால் மக்கள் ஜனநாயக கட்சியிடம் இருந்து அதற்கு சாதகமான பதில் வரவில்லை. ஆட்சி அமைக்கும் முயற்சியில் தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி இரண்டையும் பாஜக தொடர்பு கொண்டு வருகிறது. ஆனால் இழுபறி நீடிக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்க தேசிய மாநாடு விரும்பவில்லை.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள் எதிர்க்கிறார்கள். 19-ம் தேதிக்குள் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தவறினால் ஆளுநர் ஆட்சியை தவிர்க்க முடியாது.

SCROLL FOR NEXT