பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் சாந்தி பூஷண் பாராட்டு தெரிவித்துள்ளது, அவரது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியில் உள்ளவருமான சாந்தி பூஷண் கூறும்போது, "கிரண் பேடி டெல்லி முதல்வரானால் மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சி அமையும். ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜகவின் கிரண் பேடி இருவருமே அன்னா ஹசாரே வழிகாட்டுதலின் பேரில் ஊழலுக்கு எதிராகப் போராடினார்கள். இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் டெல்லி மக்களுக்கு நலன் பயக்கும். அன்னா ஹசாரே மகிழ்ச்சியடைவார்" எனத் தெரிவித்திருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான சாந்தி பூஷணின் இந்தப் பாராட்டு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாந்தி பூஷண் கருத்து தொடர்பாக, அவரது மகனும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் கூறும்போது, "எனது தந்தையின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது கிரண் பேடி அரசியலில் ஈடுபடுவதில் தனக்கு நாட்டமில்லை என கூறிவந்தார். ஆனால் இப்போது அவர் சென்று சேர்ந்திருக்கும் கட்சி ஊழலுக்கு, மதவாதத்துக்கும், பாசிஸ கொள்கைக்கும் பெயர்போனது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் பாஜக அரசு திரும்பப்பெற்றுள்ளது. அத்தகைய கட்சியில்தான் கிரண் பேடி தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் எப்படி டெல்லியில் ஊழலற்ற ஆட்சி அமையும்" என்றார்.
சாந்தி பூஷண் கருத்து குறித்து ஆம் ஆத்மி கட்சியினரிடம் கேட்டபோது, "அது அவருடைய தனிப்பட்ட கருத்து" என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.