இந்தியா-அமெரிக்கா இடையே பெரிய அளவில் பொருளாதார ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தி இருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி. குஜராத்தில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் (வைப்ரன்ட் குஜராத்) தொடக்க விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள சாத கமான சந்தர்ப்ப சூழ்நிலைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இதைவிட நல்ல நேரம் அமையாது. பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் பாராட்டுக்கு உரியது.
‘நம் அனைவரின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் பங்கேற்போம்’ என்ற மோடியின் திட்டம் மிகவும் சிறப்பானது. இதை உலகில் உள்ள அனைவரும் கடைப்பிடித்தால் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம், இந்த உலகில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியது. இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரு நாடுகளுக்கிடையிலான ஆண்டு வர்த்தகம் கடந்த 2000 ஆண்டிலிருந்து 5 மடங்காக அதிகரித்துள்ளது. இருதரப்பு அந்நிய நேரடி முதலீடு ரூ.1.89 லட்சம் கோடியாகி உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவு வரும் காலங்களில் மேலும் அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் காலங்களில் இருதரப்பு வர்த்தகம் 5 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற மோடியின் இலக்கை அடைய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
முதன்முறையாக அமெரிக்க அதிபர் ஒருவர் வரும் 26-ல் நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளார். இதில் கலந்துகொள்வதற்கு பராக் ஒபாமா மிகவும் ஆர்வமாக உள்ளார். மேலும், இந்தப் பயணத்தின் மூலம் 2 முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் அவர் பெறப் போகிறார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகம் மீதான தீவிரவாத தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தத் தருணத்தில் உலக நாடுகள் அனைத் தும் பிரான்சுக்கு ஆதரவாக உள்ளன. இந்ந நாடுகள் வெறும் ஆறுதலோடு நிறுத்திக் கொள்ளா மல் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.