முதலீடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், சேவைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிதிப் பற்றாக்குறையால் ரயில்வே துறை தவித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‘எகனாமிக் டைம்ஸ் உலக வணிக உச்சிமாநாட்டில்' கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
உள்கட்டமைப்பை மேம்படுத்து வதன் மூலம் ரயில்வேதுறை வருங்காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.5 முதல் 3 சதவீதம் வரை தனது பங்களிப்பை வழங்கும். அதைச் செயல்படுத்துவதற்கு 30 முதல் 40,000 கிமீ தூரத்துக்கு பயணிகளை மட்டுமல்லாது சரக்குகளையும் ஏற்றிச் செல்ல ரயில் இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. இதற்கு அதிகளவு முதலீடு தேவை.
ஆனால் இந்தியாவில் அந்த அளவுக்கு இந்தத் துறையில் முதலீடு செய்வதற்குத் தகுந்த நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதற்கு ஓய்வு நிதியத்தில் இருந்து ரயில்வே துறைக்கான முதலீட்டை மடைமாற்றி விடலாம். அதேபோல நக்ஸல் பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை மட்டுமல்லாது முதலீடுகளையும் நாம் பெருக்க முடியும்.
வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதன் மூலம் நக்ஸல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இளைஞர்களைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.