இந்தியா

பாரீஸ் தாக்குதல்: உ.பி. முன்னாள் அமைச்சர் அறிவிப்பால் சர்ச்சை

பிடிஐ

நபிகள் நாயகத்தை இழிவு படுத்துபவர்களுக்கு பாரீஸ் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட நிலை தான் உருவாகும் என்று உத்தரப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் ‘சார்லி ஹெப்டோ' பத்திரிகையாளர்கள் கடந்த புதன் கிழமை கொல்லப்பட்டனர். அந்தப் பத்திரிகை கடந்த காலங்களில் நபிகள் நாயகம் குறித்து கேலிச் சித்திரங்கள் வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ‘உலகில் அனைவருக்கும் அமைதியின் செய்தியை நபிகள் நாயகம் தந்துவிட்டுச் சென்றார். அவரை இழிவுபடுத்துபவர்களுக்கு மரணம் நிச்சயம்' என்று முன்னாள் அமைச்சர் ஹாஜி யாகூப் குரேஷி கூறியுள்ளார். எனினும் அவர் ‘அந்தப் பத்திரிகையின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தான் ரூ.51 கோடி பரிசு கொடுப்பதாக' வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில ஐ.ஜி.பி. சதீஷ் கணேஷ் கூறும்போது, "இது போன்ற கருத்துகள் ஏதும் சொல்லப்பட்டிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டில் சட்டம் ஒழுங்கை மீற யாருக்கும் உரிமை இல்லை. யாரும் சட்டம் ஒழுங்கை மீறவும் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

இதேபோல கடந்த 2006ம் ஆண்டு நபிகள் நாயகத்தின் சித்திரத்தை வரைந்தவரைக் கொல்பவர்களுக்கு ரூ.51 கோடி வழங்கப்படும் என்று கூறி குரேஷி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT