தனது ‘புதிய அரசியல் ஆசான்’ உத்தரவின் பேரில் ஜெயந்தி நடராஜன் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. புதிய அரசியல் ஆசான் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயந்தி கூறும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. இவர் தனது புதிய அரசியல் ஆசானின் உத்தரவுகளுக்கு ஏற்றவாறு இப்படி செயல்படுகிறார். அவரிடம் ஜெயந்திக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியிருக்கலாம். அதே அரசியல்வாதியால்தான் டெல்லி தேர்தல் சமயத்தில் ஜெயந்தியின் கடிதம் வெளியாகி உள்ளது. அவரது உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதுதான் ஜெயந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பு.
அவரிடம் ‘ஜெயந்தி வரி’ எனப் பேசப்பட்டதன் ஆவணங்கள் எதுவும் சிக்கியிருக்கலாம். அந்த வரி எந்த கட்சிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் உருவாக்கியது அல்ல. அது ஜெயந்தியே தனது கடிதத்தில் குறிப்பிட்டது.
காங்கிரஸ் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது ஜெயந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவது என்பது பரவலாக அறியப்பட்டது. ஏழைகளுக்கு ஆதரவான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளின்படி ஜெயந்தி நடராஜன் செயல்பட்டார் எனில் அவர், ராகுல் காந்தியை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்? இவ்வாறு தெரிவித்தார்.
தமாகாவில் இணைய திட்டம்
இதற்கிடையே ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்காகவே ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் நிருபம் குற்றம்சாட்டி உள்ளார்.
அமித் ஷாவை சந்திக்கவில்லை: பாஜக
பாஜக தேசிய செய்தித் தொடர் பாளர் ஸ்ரீகாந்த் சர்மா ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
கடந்த நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனை நமது தேசிய தலைவர் அமித் ஷா சந்தித்ததாக சில தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி முற்றிலும் தவறானது.
தங்களது தவறை மறைப்பதற் காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதுபோன்ற வதந்தி பரப்பப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு ஜெயந்தி நடராஜன் எழுதிய கடிதம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி யின்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையில் நடை பெற்ற தவறுகள் அம்பலமாகி உள்ளன. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலை யில் ஜெயந்தி நடராஜன் இந்தத் தகவலை வெளியிட்டதாகக் கூறப் படுவதற்கும் எங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
பல ஆண்டுகளாக காங்கிர ஸில் புகைந்து கொண்டிருந்த பிரச்சினையை எங்கள் தலையில் இறக்கி வைக்க முயற்சிக் கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.