இந்தியா

மனைவியை குத்திவிட்டு டெல்லியில் ஐ.டி. ஊழியர் தற்கொலை: திருமணமான இரண்டே மாதங்களில் துயரம்

செய்திப்பிரிவு

டெல்லியில் ஐ.டி. ஊழியர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இருவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "டெல்லி துவாரகா பகுதி பிளாட்டினம் குடியிருப்பில், அமித் பச்சன் (32), ஷிவானி பத்னி வசித்து வந்தனர்.

நேற்றிரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி ஷிவானியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது. டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஷிவானி, தனது கணவர் வெறித்தனமாக தாக்கியதால் படுகாயங்களுடன் வீட்டில் சிக்கியிருப்பதாக கூறினார். இதனையடுத்து நாங்கள் இங்கு விரைந்து வந்தோம்.

நாங்கள் வருவதற்கு முன்னர் 8-வது மாடியில் வசிக்கும் ஷிவானி, கீழே உள்ள காவலாளியின் கவனத்தை ஈர்ப்பதற்காக பூந்தொட்டியை தள்ளி விட்டிருக்கிறார். காவலாளியும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

நாங்கள் வந்தபோது, அமித் பச்சன் தரையில் கிடந்தார். அவரது கழுத்தைச் சுற்றி கேபிள் ஒயர் இருந்தது. மின்விசிறியில் தூக்கு போட்டிருந்தால் அதன் இறக்கைகள் வளைந்திருக்கும். ஆனால் அப்படி ஏதும் இல்லை. முதற்கட்டமாக தற்கொலை என கருதினாலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

இருப்பினும், கணவரை கொலை செய்துவிட்டு ஷிவானி நாடகமாடுவதாக பச்சனின் தாயார் சந்திரகாந்தாவும், தங்கை த்ரிஷாவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், ஷிவானியின் தந்தை போலீஸில் கூறும்போது, "என் மகளை அமித் குடித்துவிட்டு துன்புறுத்தியுள்ளார். அவரது பாலியல் வக்கிரங்களுக்கு இணங்க மறுத்த அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT