வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகள் குறித்த பேச்சு வார்த்தை மும்பையில் இன்று நடைபெறுகிறது.
இப்பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் வங்கி ஊழியர் தொழிற்சங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ள 4 நாள் வேலை நிறுத்தத்துடன் சேர்த்து, அடுத்து வரும் இரு விடுமுறை நாட்கள் உட்பட 6 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வேலை, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், மருத்துவ உதவி திட்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி நடத்தப்படவிருந்த ஒருநாள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
அதே நேரம் ஜனவரி 19-ம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், வங்கி ஊழியர் தொழிற்சங்கத்துக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஜனவரி 21 முதல் 24-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், ஜனவரி 21 முதல் 24 மற்றும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 26-ம் தேதி குடியரசு தினம் என்பதால் 6 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு அமைப்பாளர் சி.எம்.பாஸ்கரன் கூறியபோது, ‘மும்பையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், ஏற்கெனவே அறிவித்தபடி ஜனவரி 21 முதல் 24 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். அடுத்த 2 நாட்கள் விடுமுறை நாட்களாக வருகின்றன. இதனால் பல்லாயிரம் கோடி பணப் பரிவர்த்தனை பாதிக்கும். ஏடிஎம் சேவைகளும் பாதிப்புக்குள்ளாகும்’ என்றார்.