தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸுக்கும் நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கும் உள்ள தொடர்பு என்ன? நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு ரூ.14 கோடி வருமானம் வந்தது எப்படி என நீதிபதி சி.ஆர்.குமாரசாமி சசிகலா தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சசிகலாவின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.பசன்ட் 3-வது நாளாக வாதிடும்போது, “1991-96 காலகட்டத்தில் சசிகலா நிர்வாக இயக்குநராக இருந்த நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு ரூ.14 கோடி வருமானம் வந்தது. அந்த வருமானத்தை தான் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் சசிகலா முதலீடு செய்தார். இதற்கு முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கூட்டுசதிக்கு ஆதாரம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமார சாமி, “ஜெயா பப்ளிகேஷன்ஸுக்கும், நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கும் உள்ள தொடர்பு என்ன? நமது எம்ஜிஆர் பத்திரிக்கைக்கு ரூ.14 கோடி வருமானம் வந்தது எப்படி? எதன் அடிப்படையில் நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு இவ்வளவு பெரிய தொகை திரட்டப்பட்டது? ஏதேனும் உரிமம் பெறப்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் ஆர்.பசன்ட், “நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கு அதிமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து 'டெபாசிட்' திட்டம் மூலமாக ரூ.14 கோடி வந்தது.இதற்கான ஆதாரங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நமது எம்ஜிஆர் பத்திரிகை - ஜெயா பப்ளிகேஷன்ஸ் இடையிலான பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டவை. அதில் ஜெயலலிதாவும், சசிகலாவும் கூட்டுசதி செய்ததற்கான ஆதாரமில்லை” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “அரசுத் தரப்பு சாட்சி (202) வித்யாசாகர் (கனரா வங்கி மேலாளர், மயிலாப்பூர்) அளித்த வாக்குமூலத்தை படியுங்கள்” என்றார்.
232 பக்கங்கள் அடங்கிய வித்யாசாகரின் வாக்குமூலத்தை வழக்கறிஞர் மணிசங்கர் சுமார் 4 மணிநேரம் படித்தார்.
அதில் 1986-ல் இருந்து 1996 வரை நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தன. ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து நமது எம்ஜிஆர் பத்திரிகைக்கும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கும் வேறுசில நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிவர்த்தனை தேதி வாரியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக 1991-96 காலகட்டத்தில் 3 மடங்கு அதிகமாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
சுருக்கமாக வாதிடுங்கள்
இதையடுத்து நீதிபதி, “இவரது வாக்குமூலத்தின் மூலம் கூட்டுசதி நடைபெற்றுள்ளது தெரியவருகிறது. நமது எம்ஜிஆர் பத்திரிகை உங்களிடம் இருக்கிறதா?” என கேட்டார். உடனே கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி நமது எம்ஜிஆர் பத்திரிகையை நீதிமன்றத்தில் கொடுத்தார்.அதை சிறிது நேரம் நீதிபதி புரட்டினார்.
பிறகு நீதிபதி பேசும்போது, “வரும் திங்கள்கிழமை அரசுத் தரப்பு சாட்சிகளான ஜெயலலிதாவின் உதவியாளர் ஜெயராமன், தனியார் நிறுவனங்களை பதிவு செய்த பதிவாளர் லக்ஷ்மி நாராயணன் ஆகியோரின் வாக்குமூலத்தை படித்துவிட்டு வாருங்கள். நீதிமன்றத்தில் நீண்டநேரம் அதை படிக்காமல் சுருக்கமாக தெரிவியுங்கள்” என சசிகலா தரப்புக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிபதி, “சுதாகரன், இளவரசி தரப்பில் எந்த வழக்கறிஞர் ஆஜராக போகிறார்? அவர் எத்தனை நாட்கள் வாதிடுவார்?” என கேட்டார். அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், “அவர்களுக்காக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதந்திரம் ஆஜராகிறார்” என்றார்.
தனியார் நிறுவனங்கள் மீதான வழக்கு
இதையடுத்து நீதிபதி குமாரசாமி பேசும் போது, “சசிகலா தரப்பின் வாதத்தை திங்கள்கிழமை தொடருங்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 6 தனியார் நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சனிக்கிழமை (இன்று) நடைபெறும்” என்றார். இதையடுத்து வழக்கு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ ஃபார்ம், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 6 தனியார் நிறுவனங்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப் பட்டுள்ளன. இவை தங்கள் சொத்துகளை விடுவிக்க கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளன.