இந்தியா

மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: உ.பி.யில் பிஎஸ்பி வேட்பாளர் பலி

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) அட்ராவுளி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் தர்மேந்திர சவுத்ரி உயிரிழந்தார்.

இதுகுறித்து அலிகார் மாவட்ட காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஜே.ரவீந்திர கவுத் கூறியதாவது:

தர்மேந்திர சவுத்ரி முக்கிய நபர்கள் சிலரை சந்திப்பதற்காக பன்னாதேவி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தனது காரில் சென்றுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் காரை வழிமறித்து சவுத்ரியை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டுசென்றபோதும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அவரது கார் ஓட்டுநர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் 11 காலி தோட்டா உறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வை வைத்துப் பார்க்கும்போது, முன்விரோதம் காரணமாக கூலிப்படையினர் மூலம் தர்மேந்திரா கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனினும் உடற்கூறு ஆய்வறிக்கை கிடைத்த பிறகுதான் மேற்கொண்டு விவரம் தெரியவரும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரரான சவுத்ரி, வரும் 2017-ம் ஆண்டு நடைபெற உள்ள உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காக அட்ராவுளி தொகுதி பிஎஸ்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT