இந்தியா

செய்திகளை தணிக்கை செய்வது சாத்தியமில்லை: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

பிடிஐ

செய்திகளை தணிக்கை செய்வது சாத்தியமில்லை என்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறியதாவது:

பல்வேறு நாடுகளில் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இங்கு இல்லை. ஊடக செய்திகளை அரசு தணிக்கை செய்வது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் இல்லை. அதேநேரம், செய்திகளை வெளியிடும்போது, உணர்வுப்பூர்வமாகவும் பொறுப்பு டனும் செயல்பட வேண்டியது ஊடகங்களின் கடமை.

நம் நாட்டில் ஊடகங்களுக்கு வெளியிலிருந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை. அதேநேரம் செய்தியின் தரம், நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஊடகங்களுக்குள்ளேயே சவால்கள் நிறைய உள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை நட்சத்திர ஓட்டல்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை பற்றி தீவிரவாதிகள் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்ததாக உளவு அமைப்புகள் கூறியுள்ளன.

எனவே, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று நமது பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை தெரிவித்துள்ளன. சம்பவ இடத்திலிருந்து செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகங் களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நேரடி ஒளி பரப்பு செய்ய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT